எறும்பின் விளையாட்டு

 பல நாட்களாக பயணம் செய்து வந்த நிலக்கரி சரக்கு வண்டியில் இருந்து இரண்டு நபர்கள் இரயில் நிலைய நடைபாதையில் குதித்தனர். ஆள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அந்த இரண்டு நபர்களும் சோர்வாக காணப்பட்டனர். சுற்றி முற்றி பார்த்தனர் நடைபாதையில் மனிதர்கள் சிலர் ஓடி திரிந்தனர். இரண்டு நபர்களில் ஒருவருக்கு தூரத்தில் தெரிந்த ஒரு டீயும் உணவையும் விற்கும் கடையை பார்க்க உடனே ஊர்ந்து ஓட ஆரம்பித்தனர். இரயிலில் உணவு ஏதும் இல்லாததால் பல நாட்களாக உணவு உண்ணாமல் இருந்ததால் உணவு கடையை பார்த்ததும் சோர்வுடன் அங்கிட்டும் இங்கிட்டும் ஊர்ந்து சென்று டீ கடையை அடைந்தனர். இருவரும் கடையை அண்ணாந்து பார்த்து உணவுப் பொருட்களை சுற்றி பார்த்தனர்.

"அண்ணா 2 செட் இட்லி.. ம்ம்.. அப்புறம் உளுந்தவடை 4" "கொஞ்சம் சீக்கிரம்" என்று சொன்னவுடன் கடைக்காரர் பார்சல் கட்டியபடி "50 ப்ளஸ் ஜிஎஸ்டி 30 மொத்தம் 80 ஆச்சுப்பா.." என்றார். உணவு பார்சலை பிளாஸ்டிக் பையில் போட்டு கடைக்காரர் நீட்ட அடுக்கி வைத்திருந்த பகோடா தட்டில் பட்டு பகோடாத் தூள் கீழே விழுந்தது.

அண்ணாந்து சுற்றி பார்த்தபடி இருந்தவர்கள் கீழே விழுந்த பகோடா தூளை நோக்கி ஓடிச் சென்று உணவைத் தின்ன தொடங்கினார்கள் அந்த இரண்டு எறும்பும்.

Comments